சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியில், சிவனை வழிபட்டால், ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதைத்தொடர்ந்து நேற்று மகாசிவராத்திரியையொட்டி திருவாரூரில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில், விடங்கர், மூலவர் வன்மீகநாதர், அசலேஸ்வரர், விஸ்வகர்மேஸ்வரர், இந்திரன் பூஜீத்த லிங்கம், கமலாம்பாள், சப்தமாதர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக. ஆராதனை செய்யப்பட்ட மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர், இரவு 11 மணியளவில் 2-ம் கால பூஜை நடந்தது. கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள கமலமுனி சித்தர் லிங்கத்துக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாட்டியாஞ்சலி

இதேபோல் திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோவிலில் 4 கால பூஜைகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவாரூர் பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடந்தது.

மன்னார்குடி

மன்னார்குடியில் உள்ள அண்ணாமலை நாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், நீலகண்டேசுவரர் கோவில், கைலாசநாதர் கோவில், மீனாட்சியம்மன் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், ஜெயங்கொண்ட நாதர் கோவில், பாமணி நாகநாத சுவாமி கோவில், உள்ளிட்ட சிவன் கோவில்களில் மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் இரவு முழுவதும் பூஜைகள் நடந்தது.பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவனை தரிசனம் செய்தனர்.

சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, சாத்தனூர் காளகஸ்தீஸ்வரர் கோவிலில் நேற்று மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் வேளுக்குடி அபிமுக்தீஸ்வரர் கோவில், ருத்ரகோடீஸ்வரர் கோவில், வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில், திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோவில், அரிச்சந்திரபுரம் மயூரநாதர் கோவில், ஓகைப்பேரையூர் ஜெகதீஸ்வரர் கோவில், காக்கையாடி கைலாசநாதர் கோவில், பண்டுதக்குடி உமாபதீஸ்வரர் கோவில், வடகோவனூர் சொக்கநாதர் கோவில், லெட்சுமாங்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில், அதங்குடி விருப்பாட்சியர் கோவில் மற்றும் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வலங்கைமான்

வலங்கைமான்அருணாச்சலேஸ்வரர், கைலாசநாதர், வைத்தீஸ்வரர், காசி விசுவநாதர், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆவூர் பசுபதீஸ்வரர், அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், சந்திரசேகரபுரம் சந்திரமவுலீஸ்வரர், சின்னகரம் ஆண்டான்கோவில் கருப்பூர் அவளிவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story