கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தா.பழூர்:
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலையில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ தெய்வங்களான வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், சுவாமி, அம்பாள், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருமுறைகள் உள்ளிட்ட பதிகங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். பல்வேறு பூஜைகளுக்கு பிறகு ராஜ வீதிகளில் சுவாமிகள் எழுந்தருள வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தா.பழூர் பிள்ளைமார் வகையறா சார்பில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.