கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அரியலூர்

சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி அரியலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூர் பகுதியில் பெண்கள் தங்களது வீடுகளில் மாக்கோலம் இட்டு, சாமி படங்களுக்கு முன்பு பழங்கள், பொங்கல் வைத்து படையல் இட்டு புத்தாடை உடுத்தி பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியை வழிபட்டனர். குறைதீர்க்கும் குமரன் கோவிலில் முருகப்பெருமான் பழங்கள் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

மேலும் அரியலூர் நகரில் உள்ள விநாயகர், முருகன், மாரியம்மன், பெருமாள், சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து உச்சி வெயிலில் மார்க்கெட் தெரு, தேரடி வழியாக வந்து கோவிலை அடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். வெயிலின் தாக்கத்தால் தலையில் பால்குடத்தை சுமந்தபடி சிறுவர், சிறுமிகள் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரகதீஸ்வரர் கோவில்

இதேபோல் மீன்சுருட்டி அருகே மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூைஜ நடைபெற்றது. பிரகதீஸ்வரர் மற்றும் துர்க்கை அம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு பூ காசு

திருமானூர் ஒன்றியம் அரண்மனைக்குறிச்சி அருகே உள்ள தில்லைக் காளியம்மன் கோவிலில் நேற்று பூ காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி, அதற்கு நேர்த்திக்கடனாக குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் எடைக்கு எடை சில்லரை காசுகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். இதுபோன்று காணிக்கையாக வழங்கப்பட்ட காசுகளையும், கோவில் உண்டியலில் செலுத்தப்பட்ட காசுகளையும் எடுத்து, பக்தர்களுக்கு ஒரு பிடி சில்லரை காசுகள் வழங்கப்பட்டது. அந்த காசுகளை கொண்டு சென்று பூஜை செய்தால் வீட்டில் செல்வம் கூடும் என்பது ஐதீகம்.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், யாகங்களும் நடத்தப்பட்டன. பின்னர் அம்மனுக்கு பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதையொட்டி திருமானூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீதியுலா

உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கண்ணனூர் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் எழுந்தருள செய்து, முக்கிய வீதிகளில் விடிய, விடிய வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story