சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு


சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கரூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூர்

சித்ரா பவுர்ணமி

கரூர் தாந்தோன்றிமலையில் ஊரணிக்காளியம்மன், துர்க்கையம்மன், ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குடம் மற்றும் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெறும்.

அந்தவகையில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஊரணிக்காளியம்மன், துர்க்கையம்மன், ஆதிமாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

பக்தர்கள் ஊர்வலம்

இதனையொட்டி கரூர் சுங்ககேட்டில் உள்ள ஆதிமாரியம்மன் கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து சுங்ககேட், தாந்தோன்றிமலை வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

பண்டரிநாதன் பஜனை மடம்

கரூர் ஜவகர்பஜார் அருகே பழமைவாய்ந்த பண்டரிநாதன் பஜனை மடத்தில் சித்ரா பவுர்ணமி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலை 6.30 மணியளவில் பண்டரிநாதனுக்கும், ரகுமாயி தாயாருக்கும், சங்குசக்கர விநாயகருக்கும், ஆஞ்சநேயருக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் பால், பன்னீர், மஞ்சள் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து மாலை 6 மணியளவில் ரகுமாயி உடனாகிய பண்டரிநாதன் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நொய்யல்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமை மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

வேலாயுதம்பாளையம்

தளவாப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்படபல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

குளித்தலை

குளித்தலை அருகே மேட்டு மருதூரில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், காவடிகள் எடுத்து மேள தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர்.

பின்னர் மகாமாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகள் சந்தனக்காப்பு அலங்காரத்துடன், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.


Next Story