சித்திரை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி சிறப்பு வழிபாடு
பழனி முருகன் கோவிலில் சித்திரை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. 270 பேர் தங்கரதம் இழுத்து வழிபட்டனர்.
பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சித்திரை மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது.
9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்து இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பழனி மலைக்கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.
தங்கரதம்
சித்திரை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், காலபூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 270 பேர் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.