400 இடங்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு
சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 400 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 400 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி
சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பணித்துணை விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிவகங்கை நகரின் முதல் கோவிலான கவுரி விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே சிறப்பு தரிசனம் செய்தனர்.
சிவகங்கை நகர் பா.ஜ.க. சார்பில் சிவகங்கை சிவன் கோவில், வாரச்சந்தை வீதி, காளவாசல், ெரயில் நிலையம், திருப்பத்தூர் ரோடு, தொண்டி ரோடு, ஆவரங்காடு, உழவர் சந்தை, பஸ் நிலைய பகுதி உள்பட 9 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
வழிபாடு
சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க .சார்பில் 69 இடங்களிலும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 3 இடங்களிலும், இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 53 இடங்களிலும் மற்றும் அரசியல் கட்சி சார்பில் ஐந்து இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தமாக 400 இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெற்றன.
எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி உலகூரணி கரையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் விநாயகருக்கு சிறப்பு 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது. கொழுக்கட்டை, சுண்டல், அவல், பழவகைகள் வைத்து படையல் போடப்பட்டதை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல் கட்டுகுடிபட்டி செல்வ விநாயகர், புழுதிபட்டி வில்லி விநாயகர், புழுதிபட்டி சத்திரம் சித்தி விநாயகர், இரணிபட்டி விநாயகர், கரிசல்பட்டி விநாயகர், உலகம்பட்டி ஞானியார் மடம் விநாயகர் ஆகிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தன காப்பு அலங்காரம்
சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சித்தருக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம் உள்ளிட்டவற்றுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சித்தருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து விநாயகர் உருவத்துடன் காட்சியளித்தார்.