சிறப்புமிக்க சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்


சிறப்புமிக்க சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
x

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் சிறப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

புகழ்மிகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், பெரம்பலூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் திருச்சி-சென்னை 4 வழிச்சாலையில் உள்ள நுழைவு வாயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கோவில் நுழைவு வாயிலின் அருகே கிழக்கு திசையில் தெப்பக்குளம் உள்ளது. கோவிலை சுற்றி வயல்வெளிகள், எதிரே கருவேல் தோப்புடன் அமைந்த ஏரி என சூழ்ந்திருக்க வரம் தரும் அன்னையாம் மதுரகாளி கோவிலில் எழுந்தருளியுள்ளார்.

'சீர்மதுர காளிதனைச் சிந்தையில் வைத்திடப்

பேர் விளங்கும் நற்பேறும் பெற்றிடலாம்-

யார்க்கும் கருணை புரிவாள் கழல் பற்ற

நெஞ்சேசிறுவாச்சூர் ஆலயமே சேர்'

என்ற தமிழ்ச்செய்யுள் சிறுவாச்சூரின் திருத்தல பெருமையை எடுத்துக்கூறுகிறது. வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படும் இக்கோவில், அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் மற்றும் தீபாவளி, புத்தாண்டு பிறப்பு, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு, விஷேச நாட்களிலும் என கோவில் நடை திறக்கப்படுகிறது. மேலும் நவராத்திரி உற்சவத்தின்போது, விஜயதசமி வரை கோவில் திறந்திருக்கும்.

விமரிசையாக நடத்தப்படும் விழாக்கள்

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்திட அன்னை மதுரகாளி கொலுவீற்றிருக்கிறாள். பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிட ஆண்டுதோறும் லட்ச தீபம் ஏற்றும் விழா, நவராத்திரி கொலு-லட்சார்ச்சனை விழா, மகாபிஷேகம், சித்திரை பவுர்ணமி விழா, சித்திரை திருவிழா போன்ற விழாக்கள் இக்கோவிலில் விமரிசையாக நடத்தப்படுகிறது. இக்கோவிலின் தீர்த்தம்-திருக்குளம், தலவிருட்சம்- மருதமரம். திங்கள், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் காலை 6.30 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு காலை 11 மணி வரை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவசம் மற்றும் வைரமாலை அணிவிக்கப்பட்டு, பகல் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் உச்சிகால பூஜை வேளையில் மதுரகாளி அம்மனை வழிபடுவது மிகவும் விஷேசமானது ஆகும். உச்சிகால பூஜையின்போது இக்கோவில் பூசாரியார்கள் மகாதீபாராதனைக்கு உடுக்கை அடித்து, அன்னையையும், பிறதெய்வங்களையும் அழைத்து அவற்றின் பெருமைகளை கூறுகின்றனர். இந்த நேரத்தில்தான் அன்னை, பெரியசாமி மலையில் இருந்து இக்கோவிலில் பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக கருதப்படுவதால், அந்த சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.

வேண்டும் வரம்...

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னைக்கு அங்க பிரதட்சணமும், மாவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடும் செய்கின்றனர். வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல், கோவில் வளாகத்திலேயே அரிசியை ஊறவைத்து இடித்து அங்கேயே மாவிளக்கு தயாரிக்கப்படுவது தனிச்சிறப்பாகும். அதன்பிறகு நெய்விளக்கு ஏற்றி அன்னை சன்னதியில் தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி முடிக்கின்றனர். இதற்காக மாவு இடிக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உரல்கள்- உலக்கைகள் வழங்கப்படுகிறது. இடிக்க முடியாத பக்தர்களுக்கு மாவு இடித்து தர பணியாளர்கள் உள்ளனர். பில்லி சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை மதுரகாளி அழிக்கும் வல்லமை படைத்ததால், பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திருத்தலம் வந்து தொழுதால் அவை தாமாகவே விலகிச்சென்று விடுகின்றன.

மேலும் அன்னையின் முன் மனம் உருகி வேண்டுபவர்களுக்கு, வேண்டும் வரங்களை தருகிறாள். குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் அன்னை அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுகிறார்கள். அன்னையை குலதெய்வமாக வணங்குபவர்கள் திருமண பத்திரிகையை அன்னையின் காலடியில் வைத்து வணங்கி எடுத்து செல்கிறார்கள். இதனால் திருமணம் ஆனதும் முதலில் மணமக்கள் இங்கு வந்து வழிபாடு நடத்தியபின் மற்ற இடங்களுக்கு செல்கின்றனர்.

தங்கரத புறப்பாடு

இதேபோல குழந்தை பிறந்த பிறகு ஓர் ஆண்டில் இங்கு வந்து குழந்தைக்கு காது குத்துவிழா நடத்துகின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாத தாய்மார்கள் அன்னையின் ஆலயத்திற்கு வந்து அருகில் உள்ள சோலை கன்னியம்மன் சன்னதியில் வேண்டுதல் செய்தால், அவர்களுக்கு அன்னை தாய்ப்பால் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஒருமுறை தரிசனம் செய்தவர் மீண்டும், மீண்டும் வந்து தரிசனம் செய்து மனநிறைவு பெற்றுச்செல்கின்றனர். அடியார்களின் துன்பங்களை தீர்த்துவைத்து தடைபட்ட காரியங்களை எளிதில் நிறைவேற்றும் அற்புத அன்னையாக மதுரகாளி திகழ்கிறாள்.

கோவில் திறந்திருக்கும் நாட்களில் மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடக்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழா மற்றும் அதற்கு அடுத்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி 13 நாட்கள் மலைவழிபாடு, கண்ணாடிரதம், திருக்கல்யாணம், வெள்ளிக்குதிரை வாகனம், திருத்தேரோட்ட விழா ஆகியவை சிறப்பாக நடத்தப்படுகிறது. அற்புதங்கள் செய்த அடியார்க்கு நல்லார் சதாசிவ பிரம்மேந்திராள் இந்த திருத்தலத்தில் எழுந்தருளி அன்னை சன்னதியில் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்ததாக கூறுகின்றனர்.


Next Story