திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும்; அர்ஜூன் சம்பத் பேட்டி
திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
திண்டுக்கல் சீலப்பாடி அருகே உள்ள கொத்தம்பட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கொடியேற்று விழா நேற்று நடந்தது. இதற்கு இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். தொல்பொருள் துறை மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் இணைந்து சாமி சிலைகள் மீண்டும் வைத்து, மக்களின் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் உள்ளதால் நீர் மற்றும் நிலம் மாசுபடுகிறது. ஆகவே மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நீர்வளம் மற்றும் நிலவளம் ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டம் மிகச் சிறந்த திட்டமாகும். நமது நாட்டின் பாதுகாப்பை மேன்மேலும் அதிகரிக்க கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டம் குறித்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம். வருகிற 27-ந் தேதி ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, மாநில அமைப்புக் குழு தலைவர் பொன்னுசாமி, மாநில இளைஞரணி தலைவர் மோகன், மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.