விலை உயர்வு, பணவீக்கத்தை பா.ஜ.க.வால் தடுக்க முடியவில்லை; இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் குற்றச்சாட்டு


விலை உயர்வு, பணவீக்கத்தை பா.ஜ.க.வால் தடுக்க முடியவில்லை; இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் குற்றச்சாட்டு
x

விலை உயர்வு, பணவீக்கத்தை பா.ஜ.க.வால் தடுக்க முடியவில்லை என்று இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் குற்றம்சாட்டினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கூட்டம், ராகுல்காந்தி பிறந்தநாள் விழா மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பேரணி ஆகிய நிகழ்ச்சிகள் வேடசந்தூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:-

மக்கள் விரோத போக்கை பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. இதனால் இலங்கையை போன்று இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி வரும் சூழல் உள்ளது. ராகுல்காந்தியிடம் அமலாக்க துறை ஒரு நாளைக்கு 10 மணி நேரம் விசாரணை நடத்துகிறது. அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி, மனஉளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற ேநாக்கத்தில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு ராகுல்காந்தி பயப்படமாட்டார்.

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி என எதையும் பா.ஜ.க. அரசால் தடுக்க முடியவில்லை. வருகிற 2024-ம் ஆண்டு ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். அதற்காக கட்சியினர் அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜம்மாள், பேரூராட்சி கவுன்சிலர் கமலக்கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பி நெப்போலியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story