"புத்தகம் எழுதியபோது தான் தந்தையின் அருமை தெரிகிறது"; இயக்குனர் கஸ்தூரிராஜா பேச்சு
“புத்தகம் எழுதியபோது தான் தந்தையின் அருமை தெரிகிறது” என்று திண்டுக்கல்லில் நடந்த இலக்கிய திறனாய்வு கூட்டத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜா பேசினார்.
"புத்தகம் எழுதியபோது தான் தந்தையின் அருமை தெரிகிறது" என்று திண்டுக்கல்லில் நடந்த இலக்கிய திறனாய்வு கூட்டத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜா ேபசினார்.
திறனாய்வுக்கூட்டம்
துளிர் நண்பர்கள் அமைப்பு சார்பில் இயக்குனர் கஸ்தூரிராஜா எழுதிய 'பாமர இலக்கியம்' என்ற நூல் குறித்த திறனாய்வு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துளிர் அமைப்பின் செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் நாகராஜன் வரவேற்றார். இதில் எழுத்தாளர் முத்துநாகு, காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் முத்தையா ஆகியோர் புத்தகம் குறித்து பேசினர்.
பின்னர் இயக்குனர் கஸ்தூரிராஜா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை நடிகர் என்று குறிப்பிட்டுள்ளனர் ஆனால் என்னால் நடிக்க முடியாது. அரிதாரம் பூசிக்கொண்டு பொய்யாக நம்மால் இயக்குனரின் பேச்சை கேட்பவராக இருப்பது கடினம். நான் பல இரவுகள் புத்தகம் எழுதுவதற்காக செலவு செய்துள்ளேன். இலக்கிய அறிவு இல்லாத நான் எழுதிய இந்த புத்தகம் பல்வேறு விருதுக்கு தேர்வு செய்துள்ளதோடு, பல மேடைகளில் என்னை ஏற்றி பேச வைத்துள்ளது.
தந்தையின் அருமை
புத்தகம் எழுத தொடங்கி விட்டாலே தமிழ்மொழி நம் கையை பிடித்து அழைத்து செல்லும். இந்த புத்தகம் எழுதிய பின்புதான் எனது தந்தையின் அருமை தெரிகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஒருவர் கம்பராமாயணம் எழுதியவர் சேக்கிழார் என கூறுகிறார். அவருக்கு பெயரிலே கம்பர் இருப்பது தெரியவில்லை. நமக்கு தெரியவில்லை என்றால் எதையும் அந்த இடத்தில் பேச கூடாது. கிராமபுறத்தில் உள்ள பாமர மக்களின் ஒலிப்பதிவு தான் இந்த பாமர இலக்கியம் என்ற புத்தகம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் பசியில்லா வடமதுரை அமைப்பை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் குழுவினர் இயக்கிய குறும்படத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் ஆக்கி சங்க தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன், டாக்டர் அமலாதேவி, ஜி.டி.என். கல்லூரி பேராசிரியர் பாலகுருசாமி, விடியல் கலைக்குழு பேராசிரியர் வெண்ணிலா உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துளிர் நண்பர்கள் அமைப்பின் தலைவர் முகமது யூசுப் அன்சாரி செய்திருந்தார். முடிவில் துளிர் அமைப்பு நிர்வாகி இசக்கிமுத்து நன்றி கூறினார்.