'ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.20 ஆயிரம் பாக்கி வைத்துள்ள தி.மு.க. அரசு'; முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சாடல்
‘தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.20 ஆயிரம் பாக்கி வைத்துள்ளது’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.
'தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.20 ஆயிரம் பாக்கி வைத்துள்ளது' என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.
அ.தி.மு.க. போராட்டம்
திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி உழவர்சந்தை அருகே தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் விடியலை ஏற்படுத்துவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை, குடிநீர் வரி என மக்கள் மீது வரிகளை சுமத்தி வருகிறது. மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கிடுவோம் என்று தேர்தலின் போது கூறிய தி.மு.க. மின்கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி இருக்கிறது.
அதுமட்டுமின்றி அத்தியாவசிய உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் தொழிலாளர்கள், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் என அனைவரும் துன்பத்தில் இருக்கின்றனர்.
'பிடில்' வாசித்த மன்னன்
தமிழக மக்கள் துன்பத்தில் தவித்து கொண்டிருப்பதை பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்படாமல், தனது மகன் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். இது, ரோமாபுரி நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போன்று இருக்கிறது.
தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும் போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதால் வாரிசு அரசியல் தலைதூக்கி இருக்கிறது. ஒரு அமைச்சர் வகித்த இலாகாவை பறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மூத்த நிர்வாகிகள் மனக்கசப்பில் இருக்கின்றனர்.
ரூ.20 ஆயிரம் பாக்கி
வாரிசு அரசியலால் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விட்டது. அந்த நிலை தான் தி.மு.க.வுக்கும் ஏற்படும். தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை தருவதாக கூறியது. இதேபோல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 தள்ளுபடி செய்வோம் என்று கூறினர்.
ஆனால் தி.மு.க.ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகியும் மற்ற வாக்குறுதிகளை போன்று அவற்றையும் நிறைவேற்றவில்லை. இதனால் 18 மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.20 ஆயிரம் தி.மு.க. அரசு பாக்கி வைத்து இருக்கிறது.
அ.தி.மு.க.வுக்கு பெருகும் ஆதரவு
குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத தி.மு.க. அரசின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். இதனால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
அதை தி.மு.க.வால் பொறுத்து கொள்ள முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி இனிவரும்அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.வை மக்கள் புறக்கணித்து, அ.தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் ராஜசேகரன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.