'தி.மு.க. அரசின் செயல்பாடுகளை அமைச்சர்களே விரும்பவில்லை'; முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு
தி.மு.க. அரசின் செயல்பாடுகளை பொதுமக்கள் மட்டுமின்றி சில அமைச்சர்களும் விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
தி.மு.க. அரசின் செயல்பாடுகளை பொதுமக்கள் மட்டுமின்றி சில அமைச்சர்களும் விரும்ப வில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சாணார்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து சாணார்பட்டி, கம்பிளியம்பட்டி ஆகிய 2 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சாணார்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், கம்பிளியம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் செயல்படுத்தவே முடியாத 505 பொய் வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது. இதேபோல் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும் நிறுத்தி விட்டனர்.
மின்கட்டண உயர்வு
கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டால் சிக்கி தவித்த தமிழகத்தை, மின்மிகை மாநிலமாக ஜெயலலிதா மாற்றினார். மின்கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்து மக்களையும், தொழில் முனைவோர்களையும் மகிழ்ச்சி அடைய செய்தார். ஆனால் தற்போது மின்கட்டணத்தை அதிரடியாக பல மடங்கு உயர்த்தி மக்களை தி.மு.க. அரசு அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த ஓராண்டு மட்டுமல்ல, வருடந்தோறும் 6 சதவீத மின்கட்டண உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சொத்து வரி, குடிநீர், பால் விலை என அனைத்தையும் உயர்த்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டனர். மக்கள் பிரச்சினைகள் எதை பற்றியும் கவலைபடாமல், தனது மகன் உதயநிதியை அமைச்சராக்குவதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக அக்கறை காட்டினார்.
அமைச்சர்களே விரும்பவில்லை
தி.மு.க. அரசின் இத்தகைய செயல்பாடுகளை பொதுமக்கள் மட்டுமல்ல தி.மு.க. வினரும் ரசிக்கவில்லை. ஏன் சில அமைச்சர்களுமே விரும்பவில்லை என்பதே உண்மை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. பேச்சாளர்கள் சுல்தான், ராமச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் இளம்வழுதி, சாணார்பட்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் ராஜேந்திரன், கல்யாணசுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, ஹரிஹரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் விஜயன், குணசேகரன், ராஜா மற்றும் நிர்வாகிகள் மணிமாறன், சங்கர், மணி, சுந்தரராஜ், தாஸ், செல்வராஜ் உள்பட மாவட்ட, கிளை, சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.