வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்; பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா பேட்டி
வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா கூறினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருப்பதி வரவேற்றார். பகுதி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் சண்முகவேல், காளிதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில பொருளாளர் திலகபாமா, பொதுக்குழு உறுப்பினர் உதயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சேசுராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், நத்தம் சாலையில் கன்னியாபுரத்தில் சுங்கச்சாவடி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, திண்டுக்கல் மாநகராட்சி எல்லைகளை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் முடிவில் மாநில பொருளாளர் நிருபர்களிடம் கூறுகையில், சிறுமலையில் அனுமதியின்றி அதிக அளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். திண்டுக்கல்லில் ஜவுளி பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் திண்டுக்கல்லில் அதிகம் புழக்கத்தில் உள்ளது. அரசு ஏன் இதை கவனிக்கவில்லை. போதை ஆசாமிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றார்.