ஆட்சியில் இல்லாத மாநிலங்களை பா.ஜ.க. புறக்கணித்து வருகிறது; முத்தரசன் பேட்டி


ஆட்சியில் இல்லாத மாநிலங்களை பா.ஜ.க. புறக்கணித்து வருகிறது; முத்தரசன் பேட்டி
x

ஆட்சியில் இல்லாத மாநிலங்களை பா.ஜ.க. புறக்கணித்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதிய அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு, பூமிபூஜையை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கரமாக செயல்பட்டு வருகிறது. அக்கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள், தற்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இவ்வாறு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கையும், கவர்னர்களை கொண்டு இடையூறு செய்யும் பணிகளையும் பா.ஜ.க. செய்து வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் யாரும் தெரியவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை நினைவுபடுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் பேனா வைக்கும் திட்டத்தினை எதிர்க்கும் சீமான், பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தில் சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை வைப்பதை பற்றி ஏன் பேசவில்லை. எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்வதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட போகிறது. பிரதமர் மோடி, மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றாமல் தனது நண்பர்களான அதானி, அம்பானிகளுக்கான வளர்ச்சி திட்டங்களையே நிறைவேற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story