கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
நாமக்கல்லில் கம்பன் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. இதில் கம்பன் கழகத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் அரசு பரமேஸ்வரன் வரவேற்றார். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கம்பனில் இல்லறம், கம்பனில் வில்லறம் மற்றும் கம்பனில் சொல்லறம் ஆகிய தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பேசினார்.
இதில் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர் தினகரன் முதல் பரிசையும், வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ் 2-ம் பரிசையும், பெரம்பலூர் சீனிவாசன் மகளிர் கல்லூரி மாணவி காருண்யா 3-ம் பரிசையும் பெற்றனர். இதையடுத்து போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகைகள் கம்பன் கழக விழாவில் வழங்கப்பட உள்ளது.