கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 15-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 15-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது.
பேச்சுப்போட்டி
சிவகங்கை மாவட்ட கலெக்டர்ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி சிவகங்கை, அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாக அரங்கில் நடைபெற உள்ளது.
போட்டியில் வெற்றிபெறும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு தொகையாக ரூ.5000, 2-ம் பரிசு தொகையாக ரூ.3000, 3-ம் பரிசு தொகையாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டி 15-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
குலுக்கல் முறையில் தலைப்பு
ஒரு கல்லூரியிலிருந்து 2 மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். போட்டி நாளன்று போட்டி தொடங்கும் நேரத்தில் மாணவர்கள் போட்டிக்குரிய தலைப்பினை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அத்தலைப்பில் மட்டுமே பேச வேண்டும். இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.