கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி
மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெறும் என முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு என்ற லட்சியத்தை கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழ், ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டியை தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் நடத்த உள்ளது. போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ், ஆங்கிலத்தில் தனித்தனியாக நடத்தப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம், மாநில அளவில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.50 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை, பாலிடெக்னிக் கல்லூரிகள், தமிழக பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் இப்போட்டியில் பங்கு பெற தகுதியுள்ளவர்கள்.
ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் சார்பில், தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டிக்கு தலா 2 மாணவர்களை அனுப்பலாம். இதற்கு விண்ணப்பிக்க 'உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம் முதல் தளம், கலச மஹால் புராதன கட்டிடம், சேப்பாக்கம், சென்னை-600005' என்ற முகவரிக்கோ அல்லது smcelocution@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ வருகிற 20-ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களது செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகள் பற்றிய அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். நெல்லை மாவட்ட அளவில் தமிழ், ஆங்கில பேச்சு போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரி தலைவர் எஸ்.கே.சையத் அகமத், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், அந்தோணி செல்வராஜ், அனிஸ் பாத்திமா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 9443390991, 9489030307 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார்.