கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி


கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி கூடலூர் அரசு கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நுண்ணுயிரியல் துணைத்தலைவர் சண்முகம் வரவேற்றார். ஷேக் தாவூத், அப்துல் சமது, அபுதாகிர், ராஜேந்திர பிரபு, வாசு ஆகியோர் பேசினர்.

முன்னதாக தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் காணொலி காட்சி மூலம் பேசும்போது, சமூக, மத நல்லிணக்கத்தை பேணவும் அதற்காக பாடுபட்டவர்கள் அனுபவித்த சோதனைகள் இவற்றின் மூலம் சமூக நீதியை நிலை நாட்ட முடிந்தது.

இதை மாணவ சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் மொழியின் தொன்மை என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சமும், 2-வது ரூ.50 ஆயிரம், 3-வது ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றார். பேச்சு போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா ஹனி பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடைபெற்றது. முடிவில் தமிழ் துறை தலைவர் கரிகாலன் நன்றி கூறினார்.


Next Story