பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
அண்ணா, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணா, பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் திருப்பத்தூர் அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
இதில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 9-ந் தேதியும், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 10-ந் தேதியும் போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் 2 பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு காலை 9 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 1 மணிக்கும் போட்டி தொடங்குகிறது. ஒரு பள்ளியில் இருந்து ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவரும், கல்லூரிகளுக்கு 2 மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.
தலைப்புகள்
இதில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் போட்டிக்கு காஞ்சி தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய 5 தலைப்புகளில் பள்ளி மாணவர்களும், அண்ணாவும் மேடை பேச்சும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் ஆகிய 5 தலைப்புகளில் கல்லூரி மாணவர்களும் பேச வேண்டும்.
பெரியாரின் பிறந்த நாளுக்கு மாணவர்களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்த்திருத்தங்கள் என்ற 4 தலைப்புகளில் பள்ளி மாணவர்களும், பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மான போராளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் என்ற 5 தலைப்புகளில் கல்லூரி மாணவர்களும் பேச வேண்டும்.
போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கையெழுத்து பெற்று திருப்பத்தூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாட்களன்று நேரில் அளித்து பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.