பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 15 மற்றும் 17-ந் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 15 மற்றும் 17-ந் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர அண்ணா பிறந்தநாளையொட்டி 15-ந் தேதியும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி 17-ந் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப் போட்டிகள் திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 1 மணிக்கும் போட்டி நடக்கிறது.
அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டி பள்ளி மாணவர்களுக்கு தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவர்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ்வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி மக்களிடம் செல் என்ற தலைப்பிலும் நடைபெறும்.
பரிசுகள்
தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி பள்ளி மாணவர்களுக்கு தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார் உலக சிந்தனையாளர்களும் பெரியாரும் என்ற தலைப்பில் நடைபெறும்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசு ரூ.2000 வீதம் வழங்கப்படும்.
இத்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.