மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அடுத்த மாதம் 3-ந்தேதி ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளை சேர்ந்த 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்டத்திலுள்ள மருத்துவம், என்ஜினீயரிங், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளுக்கான தலைப்பு தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்நாடு குறித்து அமையும். போட்டி முடிவுகள் உடனே தெரிவிக்கப்படும். போட்டியின் முதல்பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரின் கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் விவரத்தை பள்ளி, கல்லூரி மூலமாக மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக முகவரிக்கு மெயில் அனுப்ப வேண்டும். tamilvalarchiramnad@gmail.com இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.