பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
நாமக்கல்லில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை யொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. இந்த போட்டியை தமிழ் வளர்ச்சித்துறை மாவட்ட உதவி இயக்குனர் ஜோதி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்களுக்கு 'தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன்', 'மாணவருக்கு அண்ணா', 'அண்ணாவின் மேடைத்தமிழ்', 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கு 'பேரறிஞர் அண்ணாவும் தமிழ் மலர்ச்சியும்', 'பேரறிஞர் அண்ணாவின் சமுதாய சிந்தனைகள்', 'அண்ணாவின் தமிழ் வளம்', 'அண்ணாவின் அடிச்சுவட்டில்', 'தம்பி மக்களிடம் செல்' என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டி நடந்தது.
இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக அரசு பள்ளிகளை சேர்ந்த 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.