பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக உள்ளூர் அல்லது அந்த மாவட்டங்களில் செயல்படும் இலக்கிய அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் இலக்கிய கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், இலக்கிய கூட்டத்தின் ஒரு பகுதியாக தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துக்கல்லூரிகள் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், பல் தொழில் நுட்ப கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) மற்றும் அனைத்து பள்ளிகளில் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்) பயின்று வரும் மாணவர்களுக்கு தனித்தனியே அரசு விதிமுறைகளின்படி பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது.

14-ந் தேதி நடக்கிறது

இந்த பேச்சுப்போட்டி திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கா.மு.ஷெரீப், ஆபிரகாம் பண்டிதர், ஜீவானந்தம், தண்டபாணி தேசிகர் ஆகிய தமிழறிஞர்கள் தொடர்புடைய தலைப்புகளில் நடத்தப்பட உள்ளது.

பேச்சுப்போட்டிகள் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று திருவாரூரில் நடைபெற உள்ள இலக்கிய கூட்ட நிகழ்வில் தமிழறிஞர்கள் முன்னிலையில் வழங்கப்படும்.

தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க முடியும். இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி கல்வி இணை இயக்குனர், கல்லூரி முதல்வர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story