விபத்தை ஏற்படுத்தக்கூடிய வேகத்தடைகள்


விபத்தை ஏற்படுத்தக்கூடிய வேகத்தடைகள்
x

புதுக்கோட்டை நகரில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர்.

புதுக்கோட்டை

வேகத்தடை

புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை துறைகளின் சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேகத்தடைகள் பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளதாக வாகனஓட்டிகள் தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே, கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே உள்ளிட்ட இடங்களில் இந்த வேகத்தடைகள் இருப்பதை காணமுடியும்.

இந்த வேகத்தடையானது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது. வாகனங்கள் வேகமாக செல்வதையும், விபத்தை தடுக்கவும் தான் வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது. ஆனால் இந்த வேகத்தடைகள் விபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் பெரியதாக உள்ளது.

பதாகைகள்

குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வேகத்தடைகளை இரு சக்கர வாகனஓட்டிகள் கடந்து செல்லும் போது பெரும் அவதி அடைகின்றனர். விளக்குகள் வெளிச்சம் இல்லாத போது அதில் வாகனங்கள் ஏறி நிலைதடுமாறி கீழே விழுந்து வாகனஓட்டிகள் காயமடைகின்றனர். மேலும் வேகத்தடை இருப்பதற்கான அடையாளங்கள் தெளிவாக இல்லை.

பிரதி ஒலிப்பான் விளக்குகள் அதில் பொருத்தப்படாமல் உள்ளது. மேலும் சில இடங்களில் வேகத்தடை இருப்பதற்காக பதாகையும் இல்லாமல் உள்ளது. எனவே இந்த வேகத்தடைகளின் அளவை குறைத்து, விபத்தை தடுக்க போலீசாரும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story