விபத்தை தடுக்க 9 இடங்களில் வேகத்தடை
கோவை- திருச்சி ரோடு மேம்பாலத்தில் 2 பேர் பலியான நிலையில், விபத்தை தடுக்க 9 இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்
கோவை
கோவை- திருச்சி ரோடு மேம்பாலத்தில் 2 பேர் பலியான நிலையில், விபத்தை தடுக்க 9 இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி ரோடு மேம்பாலம்
கோவை- திருச்சி ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.252 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக் காக திறக்கப்பட்டது. இதனால் மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே மேம்பாலத்தில் விபத்து நடப்பதை தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
அதன்படி மேம்பாலத்தில் வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே ஒளிரும் ஸ்டிக்கர்களை பொருத்தும் பணி நடந்தது.
வேகத்தடைகள்
இதையடுத்து மேம்பாலத்தில் வேகத்தடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையி னர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகமாக சென்றது தான் விபத்து ஏற்பட காரணம் ஆகும். எனவே வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க மேம்பாலத்தில் மொத்தம் 9 இடங்களில் வேகத் தடை அமைக்கப்படுகிறது.
இதில், மேம்பாலத்தின் மேல் பகுதி யில் 6 இடங்களிலும், உக்கடம் பைபாஸ் ரோட்டுக்கு பாலம் பிரியும் பகுதியில் 3 இடங்களிலும் வேகத்தடை அமைக்கப்பட்டு வருகிறது.
ஒரு வாரத்துக்குள் முடியும்
இதையொட்டி மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங் கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நேற்று மாலையில் இருந்து மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கவில்லை.
ஒளிரும் ஸ்டிக்கர்கள், வெள்ளை வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் முடிந்து விடும்.
அதன் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மேம்பாலம் திறந்து விடப்படும். இந்த மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் 40 கிலோ மீட்டர் வேகத் துக்குள் செல்ல வேண்டும். அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். விபத்து இல்லாத பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.