சாலைப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
சாலைப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
போடிப்பட்டி
தரமற்ற சாலைகளே பல விபத்துக்களுக்கு காரணமாகிறது. மேலும் வாகன உதிரிபாகங்கள் பாதிப்பு, எரிபொருள் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தரமற்ற சாலைகள் காரணமாக உள்ளது. எனவே சாலை மேம்பாட்டுப்பணிகளில் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் மடத்துக்குளம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு 2021-22 திட்டத்தில் 5, 6 மற்றும் 7-வது வார்டுகளில் ரூ.98 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்ச்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முழுமையாக நிறைவடையாததால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இதில் மயானம், ராஜவாய்க்கால் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலை பணிகள் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் முடிக்கப்படாமல் அரைகுறையாக நிற்கிறது. இதனால் சாலை முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. மேலும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நடந்து சென்றாலே தடுமாறும் நிலை உள்ளது. எனவே சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.