டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்


டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்
x

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர்

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கண்காணிப்புக்குழு கூட்டம்

திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கண்காணிப்புக்குழு தலைவர் திருப்பூர் சுப்பராயன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து துறை அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா மேம்பாடு செய்தல், அம்ரூத் திட்டத்தின் கீழ் விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள், கட்டிட மேற்கூரையில் சூரிய ஒளி மூலம் மின்உற்பத்தி செய்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அரசு மருத்துவக்கல்லூரி

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனிநபர் வீடுகளில் கழிப்பிடம் கட்டுதல், சமுதாய கழிப்பிடம் கட்டுதல், பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் குறித்தும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசும்போது, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கழிவுநீர் கால்வாய் வசதியில்லாமல் கழிவுநீர் மருத்துவக்கல்லூரி நுழைவுவாசல் முன்பு தேங்கிக்கிடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து கால்வாய் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பேசும்போது, 'உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு முன்னுரிமை கொடுத்து நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

குடிநீர் குழாய் இணைப்புகள்

ஜல்ஜீவன் திட்டத்தில் மாவட்டத்தில் 4 லட்சத்து 56 ஆயிரம் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் 79 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குடிநீர் இணைப்புகளை முன்னுரிமை கொடுத்து விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகள் உள்ளன. புதிதாக 66 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 700 கார்டுகளுக்கு மேல் இருந்தால் அந்த பகுதியில் புதிய ரேஷன் கடைகள் தொடங்கவும், குறிப்பாக திருப்பூர் மாநகரில் அரசின் நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரேஷன் கடை புதிதாக அமைக்க வேண்டும் என்று சுப்பராயன் எம்.பி. கூறினார்.

டெங்கு கொசு ஒழிப்பு பணி

முதன்மை கல்வி அதிகாரி கீதா பேசும்போது, திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கோவை, கரூர், நாமக்கல் மாவட்டத்தை விட அதிகப்படியான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இருப்பினும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மாவட்டத்தில் 33 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் தரம் உயர்வு குறித்து அறிவிப்பு வராமல் உள்ளது. பள்ளிகளுக்கு தேவையான கட்டிட வசதிகள் தேவைப்படுகிறது. பொதுப்பணித்துறையினர் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.

கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசும்போது, 'மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து இடித்து அப்புறப்படுத்த வேண்டிய கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதலில் இடிக்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். கொசு ஒழிப்பு பணிகளை தினமும் ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரத்துறையும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் எந்தவிதமான தகாத சம்பவங்களும் ஏற்படாத வகையில் பணியாற்றுவது மிகவும் முக்கியம்' என்றார்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

சுப்பராயன் எம்.பி. கூறும்போது, மத்திய, மாநில அரசு திட்டங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முழு கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வன அதிகாரி தேவேந்திரகுமார் மீனா, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

----------

(பாக்ஸ்)

ஊதியூரில் கண்ணாமூச்சி காட்டும் சிறுத்தை

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலைப்பகுதியில் சிறுத்தை பதுங்கி ஆடுகளை கொன்று வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். இதுவரை சிறுத்தையை பிடிக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று மண்டல தலைவர் இல.பத்மநாபன் கூறினார். அதற்கு மாவட்ட வன அதிகாரி தேவேந்திரகுமார் மீனா கூறும்போது, 'ஊதியர் வனப்பகுதியில் 20 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 4 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 27 நாட்களாக கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.




Next Story