ஆன்மிகத்தையும், திராவிடத்தையும் எப்போதும் பிரிக்கவே முடியாது-அமைச்சர் எ.வ.வேலு


ஆன்மிகத்தையும், திராவிடத்தையும் எப்போதும் பிரிக்கவே முடியாது-அமைச்சர் எ.வ.வேலு
x
தினத்தந்தி 9 Aug 2023 5:26 PM IST (Updated: 9 Aug 2023 6:39 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மத்திய அரசிடம் இருந்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தான் மீட்கப்பட்டது. எனவே திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மத்திய அரசிடம் இருந்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தான் மீட்கப்பட்டது. எனவே திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

அறங்காவலர் குழு அறிமுக விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உறுப்பினர்கள் டாக்டர் மீனாட்சி சுந்தரம், ராஜா ராம், கோமதி குணசேகரன், பெருமாள் ஆகியோர் அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார.் விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

2006-ம் ஆண்டு நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அறங்காவலர் குழு அமைக்கப்பட்டு சிறப்பாக 5 ஆண்டுகள் பணியாற்றினார்கள். அதைத்தொடர்ந்து மீண்டும் அண்ணாமலையார் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிப்பதற்கு இந்த அரசுக்கு வாய்ப்பு கிடைத்து புதிய அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரிக்க முடியாது

இப்போது நடந்து கொண்டிருக்கிற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆன்மிகத்திற்கு எதிரான அரசு அல்ல. ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் ஒரு நாளும் பிரிக்க முடியாது.

மத்தியில் முன்பு பா.ஜ.க. ஆட்சி செய்த போது அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள் துறை கையகப்படுத்தி நடவடிக்கை எடுத்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, ''எனக்கு சாமி நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு', எனவே அண்ணாமலையார் கோவிலை மீட்டுத் தருவேன்'' என்று சொன்னார்.

அதன்படி என்னை பலமுறை டெல்லிக்கு அனுப்பி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருடன் பேசி இந்த திருக்கோவிலை அவர் மீட்டு தந்தார். எனவே இந்த ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்

விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, முன்னாள் எம்.பி.வேணுகோபால், சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தனுசு, முன்னாள் அறங்காவலர்கள் ராமச்சந்திர உபாத்தியா சின்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

முன்னதாக கோவில் இணை ஆணையர் ஜோதி வரவேற்று பேசினார். முடிவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் நன்றி கூறினார்

விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதரன் நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் பொறியாளர் அணி மாநில துணைத்தலைவர் கருணாநிதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் கே வி மனோகரன் ஜி. புகழேந்தி, வெற்றி டிஜிட்டல் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய் ரங்கன், துரை வெங்கட் உள்பட ஏராளமான நகரில் முக்கிய பிரமுகர்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story