மளிகைக்கடையின் மேற்கூரையை பிரித்து பணம் திருட்டு
கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் எதிரே உள்ள மளிகைக்கடையின் மேற்கூரையை மர்மநபர் பிரித்து பணம் திருடுவது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே க.தொழூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 40). இவர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் எதிரே மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் சுந்தரமூர்த்தி கடையை பூட்டிவீட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலை திரும்பி வந்தபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த கல்லாப்பெட்டியில் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.13 ஆயிரத்து 500-ஐ காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது.
இது குறித்த தகவலின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடைக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்போது தகரத்தால் ஆன கடையின் மேற்கூரையை மர்மநபர் ஒருவர் பிரித்து உள்ளே புகுந்து அங்கிருந்த கல்லாப்பெட்டியை இரும்பு கம்பியால் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது.
வலைவீச்சு
அதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர் யார் என்பது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே இந்த திருட்டு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. போலீஸ் நிலையம் எதிரே உள்ள மளிகைக்கடை மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து மர்மநபர் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.