செய்யாறு துரித உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள் பறிமுதல்
செய்யாறு துரித உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்யாறு
செய்யாறில் துரித உணவகங்களில் உணவு பாதுகாப்புதங்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்லில் உள்ள தனியார் உணவகத்தில் வாங்கிய ஷவர்மா உணவை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அசைவ உணவகங்கள், துரித உணவகங்களில் சோதனை நடத்த அரசு உத்தரவிட்டது.
செய்யாறு நகரில் 50க்கும் துரித உணவகங்கள் மற்றும் சிக்கன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.
ஆற்காடு சாலை, ஆரணி கூட்டுரோடு, புறவழிச் சாலை, மார்கெட் பகுதி ஆகிய இடங்களில் உள்ள 8 கடைகளில் நடந்த சோதனையில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 3 நாட்களுக்கு முன் வெட்டிய இறைச்சி, மீன்கள் மற்றும் சமைக்க, சமைத்த உணவு பொருட்கள் உள்ளிட்ட 30 கிலோ கெட்டுப்போன உணவுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
உயிரிழப்புகள் ஏற்படும்போது மட்டும் சோதனை நடத்தாமல் அவ்வப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக் இந்த சோதனையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.