ஈரோட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
ஈரோட்டில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
விளையாட்டு போட்டி
ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, எறிப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, கொடுமுடி, பவானி, கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் ஆகிய 8 குறுமையங்களுக்கு உள்பட்ட இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இந்தநிலையில் குறுமைய அளவிலான தடகள போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டன. இதில் ஈரோடு மேற்கு குறுமைய அளவிலான போட்டிகள் வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தொடங்கி வைத்தார். மேலும், ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
3 பிரிவுகள்
இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஆகிய ஒட்டப்பந்தயங்கள், 1,500 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு ஏறிதல், ஈட்டி ஏறிதல் ஆகிய தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. 14 வயதுக்கு உள்பட்டவர்கள், 17 வயதுக்கு உள்பட்டவர்கள், 19 வயதுக்கு உள்பட்டவர்கள் என 3 பிரிவுகளில் போட்டி நடந்தது. இந்த போட்டிகளில் மாணவ-மாணவிகள் பலர் ஆர்வமாக கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள்.
இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகள் வருகிற அக்டோபர் மாதம் நடக்கும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் மண்டல அளவிலான போட்டியிலும், தொடர்ந்து சிறந்த இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டியிலும் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள்.