தர்மபுரி மாவட்ட முதல்-அமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


தர்மபுரி மாவட்ட முதல்-அமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:30 AM IST (Updated: 18 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் மாவட்ட முதல்-அமைச்சர் கோப்பை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கல்லூரி மாணவ, மாணவிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சிலம்பம், கபடி, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கு சிலம்பம், கபடி, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் கல்லூரி மாணவிகளுக்கு ஆக்கி போட்டி தர்மபுரி கமலம் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதேபோல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் தர்மபுரி செந்தில் நகரில் உள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெற்றது.

தடகள போட்டிகள்

இதேபோன்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் இன்று (சனிக்கிழமை) தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் தங்களது பள்ளி சான்றிதழ் மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

போட்டி நடைபெறும் இடங்களில் காலை 7 மணிக்கு இருக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

பரிசு

தர்மபுரி மாவட்ட அளவில் நடைபெறும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000 வழங்கப்படும். இந்த போட்டிகளில் சிறப்பிடம் பெரும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள் என்று தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.


Next Story