ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி; 46 அணிகள் பங்கேற்பு
ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி; 46 அணிகள் பங்கேற்பு
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் 46 அணிகள் கலந்து கொண்டன.
கைப்பந்து போட்டி
ஈரோடு மாவட்ட வாலிபால் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை தாங்கினார். முதல்வர் என்.ராமன் முன்னிலை வகித்தார்.
பொன்.கவுதம் சிகாமணி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட வாலிபால் அசோசியேசன் துணைத்தலைவர் ராஜன், வருமானவரித்துறை ஆய்வாளர் அருள்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழா
இந்த போட்டியில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் அணியினர் பங்கேற்றனர். மாணவர்கள் பிரிவில் 30 அணியினரும், மாணவிகள் பிரிவில் 16 அணியினரும் கலந்து கொண்டு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
போட்டிகள் இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் முதல் இடம் பிடிக்கும் ஆண்கள் அணியினருக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பிடிக்கும் அணியினருக்கு ரூ.8 ஆயிரமும், 3-ம் இடம் பிடிக்கும் அணியினருக்கு ரூ.6 ஆயிரமும், 4-ம் இடம் பிடிக்கும் அணியினருக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
மேலும் பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியினருக்கு ரூ.6 ஆயிரமும், 2-ம் இடம் பிடிக்கும் அணியினருக்கு ரூ.4 ஆயிரமும், 3-ம் இடம் பிடிக்கும் அணியினருக்கு ரூ.3 ஆயிரமும், 4-ம் இடம் பிடிக்கும் அணியினருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது.