பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விளையாட்டு போட்டுகள் நடந்தது.
பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விளையாட்டு போட்டுகள் நடந்தது.
விளையாட்டு போட்டிகள்
மயிலாடுதுறையில், ராஜன் தோட்டம், சாய் விளையாட்டு அரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:- பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் வாயிலாக பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்தும் விதமாகவும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும் இந்திய அரசால் அரியானா மாநிலம் பானிபட்டில் 2015-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
விழிப்புணர்வு
அதில் தமிழகத்தில் முதன் முதலாக கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து 2023-2024-ம் ஆண்டு முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பாலின பாகுபாட்டை நீக்கிடவும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் பெண் குழந்தை பிறப்பு விகிதக்குறைபாடு மற்றும் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் 100 மற்றும் 400, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
இந்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரியை சேர்ந்த 30 மாணவிகளுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தாதேவி, இணை இயக்குனர் (சுகாதாரம்) மருத்துவர் குருநாதன் கந்தையா, மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.