பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள்
கரூர், நொய்யல் பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
விளையாட்டு போட்டி
கரூர் மாநகர போலீஸ் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி போலீஸ் நிலையம் முன்பு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீசார் சக போலீசாருடன் இணைந்து பொங்கல் வைத்து அனைத்து போலீசாரும் வழிபட்டனர். தொடர்ந்து போலீசாருக்கான விளையாட்டி போட்டி நடந்தது. பின்னர் பெண் போலீசாருக்கு இசை நாற்காலி போட்டியும், ஆண் போலீசாருக்கு கயிறு இழுத்தல் போட்டியும் தனித்தனியாக நடந்தது.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற ஆண் மற்றும் பெண் போலீசார் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, சேலை அணிந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நொய்யல்
நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் தமிழன் மன்றம் சார்பில் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் விளையாட்டு தீப ஒளியை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு புகழூர் தாசில்தார் முருகன் தலைமை தாங்கினார். வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் முன்னிலை வைத்தார். புகழூர் நகராட்சி கமிஷனர் கனகராஜ் வரவேற்று பேசினார். போட்டியை புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தொடங்கி வைத்தார். இரவு 7 மணி அளவில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.
நேற்று காலை முதல் மாலை வரை ஓட்டப்பந்தயம், கபடி , பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்பூனில் எலுமிச்சம்பழம் கொண்டு செல்லும் போட்டி, மனைவியை கணவன் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இரவு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்றும் பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. இதேபோல் தவிட்டுப்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், அண்ணா நகர், புகழூர் நான்கு ரோடு, காந்திநகர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.