விளையாட்டு மேம்பாட்டு ஆணையப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


விளையாட்டு மேம்பாட்டு ஆணையப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

15 ஆண்டுகளாக தினக்கூலிகளாக இருக்கிறார்கள்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 2006-ம் ஆண்டில் அமர்த்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றி வந்த ஏராளமானோர், அவர்களுக்கே தெரியாமல் குத்தகை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இது நியாயமற்றது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றிய அவர்கள், தங்களை பணிநிலைப்பு செய்யவேண்டும் என்று 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.

தினக்கூலி பணியாளர்களாக நீடித்தால் அவர்கள் பணி நிலைப்பு கோருவார்கள் என்பதால், அதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது தினக்கூலி பணியாளர்களை உரிமையற்றவர்களாக மாற்றும் செயலாகும். இச்செயல் இயற்கை நீதிக்கும் எதிரானது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தினக்கூலி பணியாளர்களை குத்தகை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றிய ஆணையை அரசு ரத்து செய்யவேண்டும். மாறாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றும் அவர்கள் அனைவரையும் அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story