தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்தால் மரணம் -அமைச்சர் தகவல்


தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்தால் மரணம் -அமைச்சர் தகவல்
x

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

இந்தியாவிலேயே முன்மாதிரியான திட்டமாக 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த திட்டத்தின் 1 லட்சத்து 50 ஆயிரமாவது பயனாளியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பூந்தமல்லி பனிமலர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதவாது:-

இந்த மகத்தான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் விபத்துகள் அதிகமாக நடக்கும் 500 இடங்கள் கண்டறியப்பட்டது. இந்த இடங்களை சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் என்று 683 ஆஸ்பத்திரிகள் கண்டறியப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

விபத்து ஏற்பட்ட உடன் விபத்துக்கு ஆளானவர்களை இந்த ஆஸ்பத்திரிகளில் சேர்த்தால் முதல் 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 லட்சம் வரை செலவிடப்பட்டு அவர்களின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

17 ஆயிரம் பேர்

இந்தியா முழுவதும் ஆண்டொன்றுக்கு சாலை விபத்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணம் அடைகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் மரணம் அடையும் சூழல் நிலவுகிறது. இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு விபத்துகளை நேரில் பார்ப்பவர்கள் அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்க்கும் எண்ணம் இருந்தாலும் போலீஸ் விசாரணைக்கு வர வேண்டும் என்று நினைத்து முன்வராமல் இருந்தார்கள். இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்துகளில் சிக்குவோரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தால் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் பயனளித்து வருகிறது.

பாகுபாடு இல்லாமல்

பனிமலர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுவரை 326 பேருக்கு ரூ.22 லட்சத்து 46 ஆயிரம் தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் விபத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 107 ஆக பதிவாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் இந்த திட்டம் நல்ல பலனை தந்துள்ளது.

இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கடந்த 15 மாதங்களில் ரூ.132 கோடியே 52 லட்சம் செலவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், பனிமலர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி தலைவர் சின்னதுரை, இயக்குனர் சக்திகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story