பரவி வரும் டெங்கு.. மருத்துவமனையில் தமிழிசை திடீர் ஆய்வு
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதுவை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் புதுவை முதல் மந்திரி ரங்கசாமி அதிகாரிகளிடம், டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தவும், வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். மேலும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டர்களை அணுக அறிவுறுத்தவும், கொசுவை ஒழிக்க மருந்து தெளிக்கவும், அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார். டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டார்.