கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா
கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது.
அழகர்கோவில்,
கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது.
வசந்த உற்சவ விழா
தென்திருப்பதி, திருமாலிருஞ்சோலை என போற்றி பெருமையுடன் அழைக்கப்படுவது அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ திருவிழா தனி சிறப்புடையது ஆகும். இந்த திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலையில் தொடங்கியது.
இதை முன்னிட்டு மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணக்குடை, பரிவாரங்களுடன், சுந்தரவல்லி யானை முன்னே செல்ல, சகல பரிவாரங்களுடன் பல்லக்கில் புறப்பாடாகி, கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் அங்குள்ள ஆடி வீதிகள் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் வழியாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதையொட்டி மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சிறப்பு அபிஷேகம்
பின்னர் உள்மண்டபத்தை சுற்றி தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் தாமரை உள்ளிட்ட பல பூக்கள் விடப்பட்டிருந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமி பரிவாரங்களுடன் மீண்டும் வந்த பாதை வழியாகவே சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். வருகிற 4-ந் தேதி விழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், செய்துள்ளனர்.