திட்டக்குடி அருகே மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் தங்க சங்கலி பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
திட்டக்குடி அருகே மிளகாய்பொடி தூவி மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்,
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி மங்களம்(வயது 62). இவர் நேற்று தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பெருமுளையில் இருந்து குமாரை செல்லும் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி இருந்த ஒருவர், மங்களத்திடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து மங்களத்தின் முகக்தில் தூவினார். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மங்களம் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
வலைவீச்சு
இதில் அதிர்ச்சியடைந்த மங்களம், திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தலைமறைவாகிவிட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
விரைந்து பிடிக்க வேண்டும்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திட்டக்குடி அடுத்த எழுமாத்தூரில் 4 பெண்களிடம் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.