தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இலங்கை மலையகம் மாநாடு


தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இலங்கை மலையகம் மாநாடு
x

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இலங்கை மலையகம் மாநாடு

தஞ்சாவூர்

இலங்கையில் தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி இலங்கை மலையகம் மாநாடு நடத்தப்படுகிறது என்று பன்னாட்டு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

பன்னாட்டு கருத்தரங்கம்

இலங்கையில் தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் எட்டியுள்ளதன் நினைவாக, அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறையின் சார்பாக, "இலங்கை மலையக இலக்கியம் 200" என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். பதிவாளர் தியாகராஜன் வரவேற்றார்.

இக்கருத்தரங்கில் இலங்கைக்கான இந்திய முன்னாள் துணைத்தூதர் நடராஜன் கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கில், இந்தியாவிலிருந்து இலங்கையில் 1823-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்களின் சமூக-பொருளாதார-இலக்கியப் பின்புலங்களை ஆராயும் வகையில் "இலங்கை மலையகம் 200" பன்னாட்டு மாநாட்டினை நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டில் இலங்கை, இங்கிலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

ஆவணப்படம்

முன்னதாக இன்றைய கருத்தரங்கில் இலங்கை மலையக நிர்மாணச் சிற்பியான கோ.நடேச அய்யரின் 75-வது ஆண்டு ஞாபகார்த்த நினைவுரையை இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெருமாள் சரவணகுமார் ஆற்றினார். இலங்கை மலையகத் தமிழர் வாழ்வியல் குறித்து இங்கிலாந்து தமிழ் எழுத்தாளர் காதர், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த வக்கீல் சந்திரிகா சுப்ரமண்யன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இக்கருத்தரங்கில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் "பச்சை ரத்தம்" என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பேராளர்கள் பங்கேற்ற இப்பன்னாட்டுக் கருத்தரங்கின் தொடர்ச்சியாக மாநாடு செப்டம்பரில் நடைபெறவுள்ளது. கருத்தரங்கில் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை தலைவர் குறிஞ்சிவேந்தன், பேராசிரியர்கள் பழனிவேலு வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story