திருச்சி சிறப்பு முகாமில் 21-வது நாளாக இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்
திருச்சி சிறப்பு முகாமில் 21-வது நாளாக இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
திருச்சி:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், சூடான், நைஜீரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் தங்களை முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 21 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் மயக்கம் அடைந்ததை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு மேலும் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 8 பேர் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் ஒருவர் உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டார். இதனால் தற்போது 9 பேர் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.