கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் வரவில்லை பாதுகாப்புக்காக 1500-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு


கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு  ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் வரவில்லை  பாதுகாப்புக்காக 1500-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு
x

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் நேற்றும் வரவில்லை. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறு பிரேத பரிசோதனை

இதற்கிடையே, கடந்த 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 19-ந்தேதி மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மறுபிரேத பரிசோதனை நடந்த போது, மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வரவில்லை.

இதற்கிடையே மறுபிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை பெற்று செல்லுமாறு கூறி, வருவாய்த்துறையினர் மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் நோட்டீசு ஒன்றையும் ஒட்டினர். இருந்த போதிலும் நேற்று வரைக்கும் மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் முன்வரவில்லை.

போலீஸ் குவிப்பு

இதனால் மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் வரவில்லை. எனவே மாணவியின் உடல் பிணவறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் விதமாக கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் ஐ.ஜி.க்கள் தேன்மொழி, சந்தோஷ்குமார், கண்ணன் மற்றும் டி.ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டுகள் கள்ளக்குறிச்சி பகலவன், சேலம் அபிநவ், விழுப்புரம் ஸ்ரீநாதா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் 20 பேர் என மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story