ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

விபத்து அதிகரிப்பதால்: ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், 50 சதவீத பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை.

விரைவுச்சாலையாக மாற வேண்டிய இச்சாலை 1½ நாளுக்கு ஒரு விபத்து நடக்கும் சாலையாக மாறிவிட்ட நிலையில், சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. வாலாஜா - ஸ்ரீபெரும்புதூர் சாலைப்பணிகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததுடன், 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. இவ்வளவு கண்டனங்களை எதிர்கொண்டும் கூட சாலை விரிவாக்கப்பணிகள் விரைவுபடுத்தப்படாதது மன்னிக்க முடியாத அலட்சியம் ஆகும்.

ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜா நெடுஞ்சாலை விபத்துச்சாலை என்ற நிலையில் இருந்து விரைவுச்சாலையாக மாற்றப்பட வேண்டும். அதற்காக தடைபட்டுக் கிடக்கும் பணிகளை மீண்டும் தொடங்கவும், குறித்த காலத்திற்குள் முடித்து 6 வழிச்சாலையை வாகனங்கள் போக்குவரத்திற்கு திறந்து விடவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story