அகிலாண்டேஸ்வரிக்கு, சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்


அகிலாண்டேஸ்வரிக்கு, சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
x

அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை வழங்கினார்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து மார்கழிமாத சீர்வரிசை நேற்று இரவு வழங்கப்பட்டது. கடந்த நூற்றாண்டுக்கு முன்பு நின்று போன இந்த வழக்கத்திற்கு தற்போது மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இதேபோல் அகிலாண்டேஸ்வரியும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இவ்வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன.

இதையடுத்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு நேற்று மாலை எடுத்து வந்தனர்.

திருவானைக்காவல் கோவில் நிர்வாக அதிகாரி ஜெகதீஸ்வரி மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று (மார்கழி முதல்நாள்) காலை பூஜைகள் நடைபெறும். முதல் பூஜையின்போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகாதீபாராதனை நடைபெறுகிறது.


Next Story