ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பிறந்த நாள் விழா
ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பிறந்த நாள் விழா நடந்தது.
அரியலூர் பெரிய கடை தெருவில் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். மாலையில் மலர்களால் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. பெரிய கடைத்தெரு, சின்ன கடைத்தெரு, வெள்ளாளர் தெரு, சத்திரம் வழியாக சுவாமி வந்தபோது வீடுகள் தோறும் பக்தர்கள் வாசலில் கோலமிட்டு அம்மனை வழிபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரிய வைசிய மகா சபை மாவட்ட தலைவர் ஸ்ரீராம் என்ற சீதாராம சுப்பிரமணியன், நகர தலைவர் ராமமூர்த்தி, சுரேஷ், ஜீவா, கார்த்திக், செந்தில்குமார், ஜெயக்குமார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.