கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கலெக்டர் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்    எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு    கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தொிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தொிவித்துள்ளார். இது தொடா்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

4,500 காலி பணியிடங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பட்டப்படிப்பு, 10, 12-ம் வகுப்பு ஆகிய கல்வித்தகுதிக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு தேர்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தால் (எஸ்.எஸ்.சி.) தற்போது 12-ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு 4,500 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக http://ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக 12-ம் வகுப்பு முடித்த பொது பிரிவினர்களுக்கு வயது வரம்பு 27 வரையும், ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பு 30 வரையும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பு 32-க்கும் மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வருகிற 4-ந்தேதி கடைசி நாள்

மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 4.1.2023 அன்று கடைசி நாளாகும். இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

இந்த பயிற்சி வகுப்பு தினசாி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story