தந்தை இறந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி


தந்தை இறந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி
x

ராமநத்தம் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

ராமநத்தம்,

வேப்பூர் அருகே ராமநத்தத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 64). ஓய்வுபெற்ற சுங்க அதிகாரி. இவருக்கு சுமதி என்கிற மனைவியும், பிரியதர்ஷினி, நிவேதா, ஜெய்தா (15) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இதில் ஜெய்தா எழுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறாா். இந்நிலையில் கடந்த 8-ந்தேதி கணேசன் திடீரென இறந்தார். இருப்பினும் கணேசனின் மூத்தமகள் பிரியதர்ஷினி லண்டனில் படித்துவந்ததால், அவர் வந்த பிறகு கணேசனுக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் வரும்வரை கணேசனின் உடலை வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதால், தந்தை இறந்த துக்கத்தின் நடுவிலும் அவ்வபோது ஜெய்தா வீட்டில் படித்து வந்தார். இதனிடையே நேற்று காலை பிரியதர்ஷினி சொந்த ஊருக்கு வந்ததை தொடர்ந்து கணேசனுக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர் அப்போது தனது உறவினர்களிடம், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அதாவது நேற்று) நடைபெறும் ஆங்கில தேர்வை நான் எழுத வேண்டும் என ஜெய்தா தெரிவித்தார்.

இதையடுத்து ஜெய்தா தேர்வு எழுதி விட்டு வந்ததும் கணேசனின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.

இறுதி சடங்கு

இதனிடையே தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத ஜெய்தா பின்னர் தனது துக்கத்தை மறைத்து கொண்டு தேர்வு எழுத பள்ளிக்கு சென்றாா். மாணவியின் தந்தை இறந்ததை பற்றி அறிந்த ஆசிரியர்கள் ஜெய்தாவுக்கு ஆறுதல் கூறியதோடு, தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து கண்ணீர் மல்க மாணவி தேர்வு எழுதினாா். தேர்வு முடிந்ததும் வெளியே வந்த மாணவியை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர் கணேசனின் இறுதி சடங்கு நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story