எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி


எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

விடைத்தாள் திருத்தும் பணி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி, கடந்த 20-ந்தேதி முடிந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருத்தும் மையமாக அறிவிக்கப்பட்டது. அங்கு நேற்று காலை 10 மணிக்கு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

முன்னதாக விடைத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த அறை சீல் திறக்கப்பட்டது. மேலும் விடைத்தாள் திருத்துபவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலர் சற்குணவதி பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் காரணமாக பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

துல்லியமாக திருத்த வேண்டும்

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி இன்று (நேற்று) தொடங்கி, வருகிற 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. விடைத்தாள்களை திருத்த 500 உதவி தேர்வர்கள், 53 கூர்ந்தாய்வாளர்கள், 50 முதன்மை தேர்வர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உதவி தேர்வர்கள் திருத்தும் விடைத்தாள்களை கூர்ந்தாய்வாளர்களும், முதன்மை தேர்வர்களும் சரிபார்ப்பார்கள். இது தவிர மதிப்பீட்டு அலுவலர் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட 50 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொள்ளாச்சியில் மட்டும் 51 ஆயிரத்து 740 விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. விடைத்தாள்களை துல்லியமாக திருத்த வேண்டும். எந்த மதிப்பெண்ணையும் விடாமல் நிதானமாக திருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விடைத்தாள்கள் திருத்தி முடித்ததும், தினமும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story