எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:45 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் 23,324 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 200 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் 23,324 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 200 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதியுடன் இந்த தேர்வு நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் 9¾ லட்சம் மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 233 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 11,827 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 198 பள்ளிகளைச் சேர்ந்த 11,497 மாணவ- மாணவிகளும் என மொத்தம் 431 பள்ளிகளைச் சேர்ந்த 23,324 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள். இதற்காக மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் ஒரு தனித்தேர்வு மையம் உள்பட 67 தேர்வு மையங்களும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் ஒரு தனித்தேர்வு மையம் உள்பட 49 தேர்வு மையங்களும் என மொத்தம் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை கண்காணிக்க...

மேலும் வினாத்தாள்கள் இன்று காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. தேர்வு மையங்களை கண்காணிக்க நிலையான படையில் 100 பேரும், முதன்மைக்கல்வி அதிகாரி மற்றும் கல்வி மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பறக்கும் படையில் 100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள், வினாத்தாள் கொண்டு செல்லும் வழித்தட வாகனங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

வரிசை எண் எழுதும் பணி

இதற்கிடையே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்களில் போடப்பட்டுள்ள மேஜைகளில் மாணவர்களுக்கான வரிசை எண் எழுதும் பணிகளை ஆசிரிய- ஆசிரியைகள் நேற்று மேற்கொண்டனர்.


Next Story